தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான தர வரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
நடப்பாண்டில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்பட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அதன்படி, திருப்பூரைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடமும், நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி மோகனப் பிரியா 705 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். அதேபோல, முதன் முறையாக 7.5% உள் ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன்படி, தேனியைச் சேர்ந்த மாணவன் ஜீவித்குமார் முதலிடமும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவன் அன்பரசன் இரண்டாம் இடமும், சென்னையைச் சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வரும் 18-ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், பாதுகாப்பான இடைவெளியுடன் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்தார். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பில் 313 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், பல் மருத்துவத்தில் 92 அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.