பொள்ளாச்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட காண்டூர் கால்வாய் உள்ளிட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்வாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 8ம் தேதி பெய்த கனமழையால், கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் போது பாறைகள் விழுந்ததில் பரம்பிக்குளம் காண்டூர் கால்வாய் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதமடைந்தது. இந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகூர் ஊற்று மலை கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான 2 வயது பெண் குழந்தையின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, குழந்தையின் பெற்றோரிடம் அமைச்சர் வேலுமணி வழங்கி ஆறுதல் கூறினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.