கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி ?

கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்த 11 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்த ஆளும் கூட்டணி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இவர்களில் 11 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும்12 ம் தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும் மதாசார்பற்ற ஜனதா தளமும் இறுதிகட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு முயற்சியாக காங்கிரசுக்கு முதல்வர் பதவி தரப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் தொடர்பில் உள்ளதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தக்க வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் குமாரசாமி இன்று பிற்பகல் டெல்லி திரும்பினார். அவர் உடனடியாக பெங்களூரு விரைந்து எம்.எல்.ஏ. க்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே குழப்பத்துக்கு பாஜக தான் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version