இனி இவருக்கு பதில் இவர்.. அமைச்சராகும் மற்றொரு வாரிசு..!

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன விடியா திமுக அரசின் பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விடியா திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மக்களுக்கு எந்த திட்டத்தையும் இதுவரை முறையாக செயல்படுத்தவில்லை. மாறாக சொத்து வரி, மின்கட்டணம், மற்றும் ஆவின் பால் விலையை உயர்த்தியதுதான் விடியா அரசின் சாதனையாக இருந்தது. இந்தநிலையில் கட்சி தொண்டர்களை கல் வீசி தாக்கியது, கட்சி நிகழ்ச்சியில் எம்எல்ஏவின் உதவியாளர் மீது முதுகில் அடித்தது போன்ற பல்வறு சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர் நாசர், தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் எதை பற்றியும் கவலைப்படாமல் இருந்தார். இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்.எல்.ஏவும் திமுகவின் மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 11ம் தேதி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் மூத்த அமைச்சரான துரைமுருகன், தமிழக ஆளுநரை காலையிலேயே சந்தித்து பேசுவதாக தகவல் வெளியான நிலையில், அதனை துரைமுருகன் மறுத்தார். ஆனால் திடீரென அமைச்சர் நாசர் நீக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பு, நாசரை போன்று சர்ச்சைகளுக்கு பெயர் போன, பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் நாசரின் மகனான ஆசிம் ராஜா ஆவடி மாநகராட்சி கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில், தந்தையின் பெயரை கூறிக் கொண்டு, தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்ததாக ஏராளமான புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இது அமைச்சர் நாசரை வாட்டி வதைத்து வந்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களிலேயே அவருடைய பதவியும் பறிபோனதால் நாசரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற தம்பட்டம் அடித்த விடியா திமுக, தற்போது மூத்த அமைச்சர்கள் பட்டியலில் இருக்கும் நாசரை நீக்கியிருப்பது ஆட்சியின் நிர்வாக குளறுபடிகளை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது.

Exit mobile version