”ஏ மன்னா… மாமன்னா” என்று சில்லறையை சிதறவிட்டுக் கொண்டிருக்கும் உடன் பிறப்புகளுக்கு தற்போது என்னடா இப்படி ஆயிருச்சு என்று முகத்தில் கரியை பூசியது போல ஆகிவிட்டது. அப்படி உடன்பிறப்புகளின் முகத்தில் கரியை அள்ளி பூசியவர் வேறு யாருமல்ல, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தான்.
சமீபத்தில் சமூகநீதியை மையக்கருத்தாகவும், வாரிசு அரசியலை எதிர்த்தும் வாரிசு அமைச்சர் நடித்த “மாமன்னன்” என்கிற திரைப்படம் வெளியானது. அத்திரைப்படத்தில் தன்னை மேலானவர் என்று கருதுபவனுக்கு நிகராக சாமானியன் சரிக்கு சமமாக அமரும் அரசியலைப் பேசுகிறது. இங்கு யாரும் தாழ்ந்தவன் அல்ல; எல்லோரும் மனிதர்களே என்கிற அடிப்படையில் எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.
படத்துல மட்டுந்தான் சமூகநீதி… நிஜத்துல…!
இப்படி சமூகநீதிக்கு அம்பாசிடராக தன்னை முன்மொழியும் வாரிசு அமைச்சர் உதயநிதியும் திமுக கட்சிக்காரர்களும் காட்சிக்காக மட்டுமே இதனை செய்கிறார்கள் என்று தற்போது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது. அதற்கு பல காரணங்களையும் தீண்டாமை கொடுமைகளையும் நம்மால் கூற முடியும். இங்ஙனம் தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் செய்திருப்பதுதான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேச்சுப்பொருளாக வளர்ந்துள்ளது. தன்னை சந்திக்கவந்த பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவரும், மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளருமான முஹம்மது யூனூஸ் உள்ளிட்ட சில நிர்வாகிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிற்க வைத்து பேசியுள்ளார். தன் சொந்தக் கட்சிக்காரர்கள் என்று கூட நினைக்காமல் உரிய மரியாதை கொடுக்காமல் இப்படி அமைச்சர் நடந்துகொண்டது பெருத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஸ்டாலின் கதறல்..!
சமூகநீதிதான் எங்கள் சொத்து என்று தம்பட்டம் அடிக்கும் திமுக முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய அமைச்சரவைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமியர்களை நிற்க வைத்து வதைப்பதை கண்டும் காணாமல் இருப்பது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை. ஏற்கனவே இப்படித்தான் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தன்னை சந்திக்க வந்த ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மக்களை நிற்க வைத்து தகாத வார்த்தையால் பேசியும் சர்ச்சைக்குள்ளானார். இதைத் தவிர அமைச்சர் பொன்முடி தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்ணை எஸ்.சிதானமா நீ என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இப்படித்தான் திமுகவினர் சமூகநீதியைக் காத்துவருகிறார்கள். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை கூப்பிட்டு காண்டாக கத்தியிருக்கிறார். “ இது அஞ்சு வருச காண்ட்ராக்ட்டு அமைச்சர்களே.. யாரும் இதுல மண்ணள்ளி போட்றாதீங்க” என்று புலம்பியிருக்கிறார். ஆனால் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்ற பழமொழிக்கு இணங்க, உங்கள் சொல்பேச்சை கேட்டால் நாங்க எப்படி கெத்து காட்ட என்று அமைச்சர்கள் வீம்பு பிடிக்கின்றனராம். ஆக மொத்தம் சமூக நீதிக்கு சமாதி கட்டும் வேலையை சூசகமாக பார்க்கிறது திமுக.