‘ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே, தமிழக அரசின் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டுவதாக விமர்சித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த வித இன்னலுக்கும் ஆளாகக் கூடாது என்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை எடுத்ததாக குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் துரிதப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியுடன் கூடிய, விலையில்லா ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான், அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், தலைமைச் செயலாளரிடம் திமுக அளித்த 98 ஆயிரத்து 752 மனுக்களில், ஒன்றில் கூட போக்குவரத்து வசதி மற்றும் சிறு, குறு தொழில் பற்றி குறிப்பு இல்லை என்றும், அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாகவும் அமைச்சர் காமராஜ் விமர்சித்தார்.
Discussion about this post