பாதுகாக்கப்பட்ட சிறப்பு காவேரி வேளாண் மண்டலம் அறிவிப்பு சம்பந்தமாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உட்பட டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சரின் இந்த துணிச்சலான அறிவிப்பிற்கு, டெல்டா மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டம் அல்லாத மாநிலத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், விவசாயிகளின் நலன் காக்கும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உள் நோக்கம் கற்பிக்கும் வகையில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருப்பது ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், முந்தைய மைனாரிட்டி திமுக அரசு தான் தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வித்திட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அப்போது மத்தியில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடிவெடுத்து, 2010ஆம் ஆண்டு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றார் என்று அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வுப் பணி துவங்க, 4 ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது திமுக தான் என்றும் அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்டாலின் முன்னிலையில் தான், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அன்று டெல்டா விவசாயிகளை பாதுகாக்க தவறிய திமுக அரசு, தற்போது முதலமைச்சரின் துணிச்சலான அறிவிப்பிற்கு கிடைத்த வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமல், மக்களை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் செயலை ஸ்டாலின் செய்தவாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் ஸ்டாலினின் உள்நோக்கம் அனைத்து விவசாயிகள் நன்கு அறிவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அறிக்கையை பொய்யாக்கும் வகையில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” தொடர்பாக விரைவில் புதிய தனிச்சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post