கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 8 ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற மறுநாளே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தனது இரங்கலை தெரிவித்தத்துடன், அவரது குடும்பத்திற்கு தக்க நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்ததை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து 2 நாட்களாக ஒரு அனுதாபம் கூட தெரிவிக்காமல் நேரடியாகச் சென்று பெயரளவில் 5 லட்சம் ரூபாயை அக்குடும்பத்தினருக்கு வழங்கிவிட்டு, காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை, இதில் தான் தமிழகம் முதலிடம் என்று ட்விட்டரில் பதிவிட்டு, ஒரு காவல் அலுவலரின் மரணத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டுள்ளதாக அமைச்சர் சாடியுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, கூலிப்படையினரால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளரின் உயிரை அவ்வழியே சென்ற திமுக அமைச்சர்கள் வேடிக்கை பார்த்ததை தொலைக்காட்சியில் மக்கள் கண்டதையும் குறிப்பிட்டுள்ளார். இது போன்று திமுக ஆட்சி காலத்தில் காவல்துறையினருக்கு நடைபெற்ற அநீதிகளை பட்டியலிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து திமுக தலைவர் ட்விட்டரில் இட்டுள்ள பதிவு மக்களை சிரிக்கத்தான் வகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Discussion about this post