விழுப்புரம் மாவட்டம் தளவானூரில் ரூ.25,35,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணையை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கடலூர் மாவட்டம் திரிமங்களம் இடையே ரூ.25,35,00,000 மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தளவானூர் தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற விழாவில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று தடுப்பணையை திறந்து வைத்தார்.
இந்த தடுப்பணை 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்டது. இத்தடுப்பணை மூலம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் 4,150 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.