மழைநீரை சேமிக்க பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழைக்கு முன் மழைநீரை சேமிக்க அனைவரும் தங்கள் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை புணரமைத்து புத்துயிர் அளிக்கவும், அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், தமிழக அரசின் உத்தரவின் பேரில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதற்கட்டமாக ஒரு வார்டுக்கு ஆயிரம் கட்டிடங்கள் வீதம் 200 வார்டுகளில் 2 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியில், பயன்பாடற்று உள்ள 118 சமுதாய கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மழை நீர் சேகரிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்றும், பொது மக்கள் அவரவர் இருப்பிடத்தில் மழைநீரை சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும் என்பதால், பொது மக்கள் தங்கள் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்குமாறு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version