மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாட்டில், அடுத்த 2 நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது. குறிப்பாக, நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியிருக்கிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும், வானிலை மையம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Exit mobile version