மானுடம் பாடிய மக்கள் கவிஞர் இன்குலாப்பின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எழுத்துலகில் அவர் போராட்ட வாழ்வு குறித்த செய்தி தொகுப்பை காணலாம்…
“சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே” என்று கீழ்வெண்மணியில் மனித உயிர்கள் எரிக்கப்பட்ட போது, அந்த நெருப்பு அணைவதற்குள், அதிகார பீடத்தை தனது கவிதை சாட்டையால் சுழற்றியவர் தான் மக்கள் கவிஞர் இன்குலாப்.
1944-ம் ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த இவர், தனது இயற்பெயரான சாகுல் ஹமீது என்பதை பின்னாளில் இன்குலாப் என்று மாற்றிக்கொண்டார்.
கல்லூரி மாணவராக இருந்த போது 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் களம் கண்டு சிறைக்கு சென்ற இன்குலாப், பொதுவுடமை கொள்கையின் குன்றாக விளங்கினார்.
படைப்பாளி என்பவன் எப்போதும் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்பதை எழுத்தின் மூலமும், வாழ்வின் மூலமும் பறை சாற்றிய அவர், வெள்ளை இருட்டு, சூரியனை சுமப்பவர்கள், காந்தள் நாட்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நூல்கள், எண்ணற்ற கவிதைகள், சிறுகதைகள், நாடக நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ் ஈழ விடுதலைக்காக இன்குலாப் எழுதிய மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா என்ற பாடல் தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று ஆயிரக்கணக்கான மேடைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
2006-ம் ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இன்குலாப்பிற்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதையும், ஒரு லட்சம் பணத்தையும், தமிழ் ஈழத்தை அரசு காக்க தவறிவிட்டது என்று கூறி திருப்பி கொடுத்துவிட்டார்.
தனது புரட்சிகர வார்த்தைகளால் மக்கள் கவிஞராக வலம் வந்த இன்குலாப், 2016-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் நாள் உடல் நலக்குறைவால் காலமானார். பின்னர் அவரது உடலை இன்குலாப்பின் ஆசைப்படி செங்கை அரசு மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது.
இன்குலாப் எழுதிய காந்தள் நாட்கள் என்ற கவிதை நூலுக்கு 2017-ம் ஆம் ஆண்டு சாகித்ய அகடாமி விருது கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர், இன்குலாப் விருதுக்காக எழுதவில்லை என்றும், தமிழுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் மட்டுமே எழுதினார் என்று விருதை வாங்க மறுத்துவிட்டனர்.
மனிதன் என்றொரு பாடலை இசைத்துக் காட்டி, பெயரில் மட்டுமல்ல வாழ்விலும் போராளியாக வாழ்ந்த மக்கள் கவிஞர் இன்குலாப்பின் நினைவை போற்றுவது நமது கடமை…
நியூஸ் ஜெ செய்திகளுக்காக சாக்லா…
Discussion about this post