நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க. முழக்கம் எழுப்பிய நிலையில், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை இன்று கூடியதும், ரபேல் ஊழல் புகார் தொடர்பாக விவாதிக்க கோரி, காங்கிரஸ், சிபிஎம் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதே போல் மேகேதாட்டுவில் தடுப்பணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கிய, மத்திய நீர்வளத்துறையை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை மீண்டும் கூடியதும் முத்தலாக் அவசர சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையிலும் ரபேல் விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க. உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு சென்று, கையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post