தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ பட்ட மேற்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த படிப்பை முடிக்கும் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்பது விதி. இந்த விதியை எதிர்த்து 276 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அதில், மனுதாரர்கள் இரண்டு ஆண்டுகள் மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை என்ற தனி நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்தார். அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்றும், 2 ஆண்டுகள் பணி முடித்த பிறகே, சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்குள் பணி வழங்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட மாணவ – மாணவியரின் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.