மக்களவை தேர்தலையொட்டி செயற்கைகோள் தொலைக்காட்சிகள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை கண்காணிக்க நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக கண்காணிப்பு பிரிவு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக செயற்கைகோள் தொலைக்காட்சிகள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை கண்காணிக்கவும், நாளிதழ் செய்திகளை கண்காணிக்கவும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் செய்தித்தாள்களில் வெளிவரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் விளம்பரங்கள், பிரச்சார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.
தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரச்சாரம் குறித்த செய்திகள், தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்புகள், தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படுவதை பதிவு செய்து வருகின்றனர்.