வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து வெளியேறி, மதிமுக என்னும் தனிக்கட்சி கண்ட வைகோ, இன்று தனது வாரிசை வளர்த்து விட்டதால் கட்சியை கலைத்துவிடும்படி நிர்வாகிகளே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். 5 பேரின் உயிர்த்தியாகத்தில் உருவான மதிமுக, மூடு விழா காணப்போகிறதா? இதோ பார்க்கலாம்.
தோளில் அணிந்த கருப்புத்துண்டை இருகரங்களாலும் பற்றிக் கொண்டு கூரான பார்வை, மிடுக்கான தோற்றம் என தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த தலைவர்தான் வை.கோபால்சாமி எனப்படும் வைகோ… திராவிடக் கட்சிகளின் அடிநாதமான பேச்சாற்றல் கைவரப்பெற்றவர்… அதனையே தனது மூலதனமாக்கி இளைஞர்களை தன் வசம் ஈர்த்துக் கொண்டிருந்தார் திமுகவில்… எங்கே தனது வாரிசு ஸ்டாலினை, அரசியலுக்கு கொண்டு வருவதற்கு கலிங்கப்பட்டி வைகோ தடையாகி விடுவாரோ என்று, தன்னை கொலை செய்ய வைகோ திட்டமிட்டதாகக் கூறி அவர் மீது கொலைப்பழி சுமத்தி 1993ல் வெளியேற்றினார் கருணாநிதி. முன்னதாக வைகோ நீக்கப்படலாம் என்னும் சூழல் ஏற்பட்டதும் அதனைக் கண்டித்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகிய 5 பேர் வைகோவுக்கு ஆதரவாக தீக்குளித்தனர். இதையடுத்து தனக்காகவும், தன்னை நம்பி வந்தோருக்காகவும் 1994ஆம் ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார் வைகோ…
கட்சி ஆரம்பித்த வேகத்தில் 1996ல் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவருக்கு பெரும் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. தொடக்கமே தோல்வியில் முடிய, அதற்குப் பிறகான தேர்தல்களில் வைகோவின் சந்தர்ப்பவாத கூட்டணிகளும், கொள்கையில் நிலையில்லாத மதில்மேல் பூனையான நிகழ்வுகளும் கட்சியையே கலகலத்துப் போகச் செய்தது என்றால் மிகையில்லை… அதே நேரம் திமுகவின் சதிராட்டங்களால், மதிமுகவின் மேல்மட்ட தலைவர்கள் கூட கட்சியில் இருந்து வெளியேறி திமுகவை தஞ்சம் அடைய, ஒன் மேன் ஆர்மியாக மதிமுகவை சுமந்து செல்லும் நிலைக்கு ஆளானார் வைகோ…
மதிமுக எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று அரசியல் நோக்கர்களால் ஆரூடங்கள் சொல்லப்பட்ட நேரங்களில் உடனடியாக ஒரு நடைபயணத்தை தொடங்குவதும் வைகோவின் இயல்பு… ஆனால் என்று தன்னை கொலைப்பழி சுமத்திய திமுகவுடனேயே கூட்டணி வைத்தாரோ… அன்றே வாரிசு அரசியலுக்கு வைகோவும் அடிமையாகி விட்டார். அதன் எதிரொலியாக, தனது மகன் துரைவையாபுரியை மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக கொண்டு வந்தார். எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக கொந்தளித்தாரோ… அதே வாரிசு அரசியல் மதிமுகவில் தலைகாட்டத் தொடங்கியதும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்புடன் காலம் தள்ளிக் கொண்டிருந்த சீனியர்கள் இப்போது எதிர்ப்புக் குரல் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். வைகோவுக்காக உயிர் நீத்த அந்த 5பேரின் ஆன்மாக்கள் கூட இதனை ஏற்றுக் கொள்ளாது.
வைகோ கோஷ்டி என்று சீனியர்களும், துரைவையாபுரி கோஷ்டி என்று இளைஞர்களும் உள்ளுக்குள் மோதிக் கொண்டு கட்சியை சுக்குநூறாகி வருகிறார்கள் என்னும் வாதங்களும் மதிமுகவினருக்குள் நிலவிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான், மதிமுக கூடாரத்தை கலைத்துவிடலாம் என்று மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருக்கிறார். வைகோவின் சமீப கால நடவடிக்கைகளால், கட்சிக்கும், அவருக்கும், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், சர்ந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு, வைகோவும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை கட்சியினர் அறிந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக, வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த கட்சியினர், மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கட்சியை, தாய்க் கட்சியான தி.மு.க.,வில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என்றும் கூறியுள்ளார்.
1994 மே 6ஆம் தேதி தொடங்கிய மதிமுக என்னும் கப்பல் அரசியல் கடலில் மூழ்குவது உண்மைதான்.. அதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஊழல் என்னும் ஓட்டையால் மூழ்கிக் கொண்டிருக்கும் திமுக என்னும் கப்பலில் ஏறித் தப்பிக்க நினைப்பது எந்த வகையான அறிவாளித்தனமோ?