அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.
மதிமுக எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று அரசியல் நோக்கர்களால் ஆரூடங்கள் சொல்லப்பட்ட நேரங்களில் உடனடியாக ஒரு நடைபயணத்தை தொடங்குவதும் வைகோவின் இயல்பு… ஆனால் என்று தன்னை கொலைப்பழி சுமத்திய திமுகவுடனேயே கூட்டணி வைத்தாரோ… அன்றே வாரிசு அரசியலுக்கு வைகோவும் அடிமையாகி விட்டார். அதன் எதிரொலியாக, தனது மகன் துரைவையாபுரியை மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக கொண்டு வந்தார். எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக கொந்தளித்தாரோ… அதே வாரிசு அரசியல் மதிமுகவில் தலைகாட்டத் தொடங்கியதும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்புடன் காலம் தள்ளிக் கொண்டிருந்த சீனியர்கள் இப்போது எதிர்ப்புக் குரல் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். வைகோவுக்காக உயிர் நீத்த அந்த 5பேரின் ஆன்மாக்கள் கூட இதனை ஏற்றுக் கொள்ளாது.
வைகோ கோஷ்டி என்று சீனியர்களும், துரைவையாபுரி கோஷ்டி என்று இளைஞர்களும் உள்ளுக்குள் மோதிக் கொண்டு கட்சியை சுக்குநூறாகி வருகிறார்கள் என்னும் வாதங்களும் மதிமுகவினருக்குள் நிலவிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான், மதிமுக கூடாரத்தை கலைத்துவிடலாம் என்று மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருக்கிறார். வைகோவின் சமீப கால நடவடிக்கைகளால், கட்சிக்கும், அவருக்கும், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், சர்ந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு, வைகோவும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை கட்சியினர் அறிந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக, வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த கட்சியினர், மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கட்சியை, தாய்க் கட்சியான தி.மு.க.,வில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என்றும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். தற்போது தன்னுடைய அடிப்படை உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு கட்சியைவிட்டு விலகியுள்ளார்.