ஒருநாள் தொடரில் தவான் விலகல்: டெஸ்ட் வீரர் அணியில் சேர்ப்பு

பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியாவும், திருவனந்தபுரத்தில் நடந்த 2வது 20 ஓவர் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

முன்னதாக, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், தொடக்க வீரர் ஷிகர் தவான் அணியில் இருந்து நீக்கப்பட்டார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் காயம் ஏற்பட்டதால் இவருக்கு பதிலாக இருபது ஓவர் தொடருக்கு இளம் வீரர் சஞ்ச சாம்சனை தேர்வுக் குழுவினர் அறிவித்தனர். ஆனால், முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இன்றைய போட்டியிலாவது வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தவானின் காயம் பூரணமாக இன்னும் குணமடையவில்லை. அவர் முழு உடற்தகுதி பெறாததால், அவருக்கு பதிலாக மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் வருகிற 15ந்தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகிற 18ந் தேதி 2வது போட்டியும், 22ந் தேதி 3வது போட்டியும் நடைபெறுகிறது.

ஏற்கனவே, உலகக் கோப்பையில் காயம் அடைந்த தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.

Exit mobile version