நேற்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு அணிகளும் சந்தித்துக் கொண்டால் அங்கே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படிதான் நேற்றைய ஆட்டம் அனல் பறக்க இருந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக ஆர்சிபி பவுலர்களை எதிர்கொண்டு 226 ரன்கள் குவித்தது. டெவான் கான்வே 83, சிவம் தூபே 52, ரகானே 37 ஆகியோரின் அதிரடியால் இந்த இமாலய இலக்கை சென்னை அணி குவித்தது.
பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு நேர்ந்தது என்னவோ அடுத்தடுத்து அதிர்ச்சிதான். கோலி 6 ரன்னில் நடையைக் கட்ட, லோம்ரோரர் பூஜ்ஜியம் ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஆனால்.. அப்போதுதான் நிகழ்ந்தது ஒரு அற்புதம் என்பதுபோல கேப்டன் பாப் டூ ப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி சென்னை பவுலர்களை மானாவாரியாக அடித்து நொறுக்கினார்கள். ஒவ்வொரு பவுலர்களின் கண்களிலும் மரண பீதி கோர தாண்டவமாடியது. வெறும் பத்து ஓவர்களில் 121 ரன்கள் குவித்து மிரட்டியது ஆர்சிபி. ஆனால் இவர்களின் விக்கெட் இழந்ததும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது பெங்களூர் அணி. மேக்ஸ்வெல் 76, டூ ப்ளெசிஸ் 62 ஆகிய ரன்களை எடுத்தனர். கேப்டன் தோனியே ஆட்ட முடிவில் இவர்கள் இருவரையும் அவுட் ஆக்காமால் இருந்திருந்தால் 18வது ஓவர்களிலேயே மேட்சை முடித்திருப்பார்கள் என்று புகழாரம் சூட்டினார். முடிவில் ஆர்சிபி 216 ரன்கள் எடுத்து எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆனால் சென்னை ரசிகர்கள் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் ஆர்சிபியின் பேட்டிங் குறித்து வியந்து பேசிவருகிறார்கள்.
Discussion about this post