உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத பலம் வாய்ந்த அணியாக இந்தியா வலம் வருகிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர். கடந்த இரண்டு போட்டிகளில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவதால், பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. அதனால் இன்றைய போட்டியில், அணியில் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 4-வது வீரராக களமிறங்கும் தமிழக வீரர் விஜய் ஷங்கர், ரன் குவிக்க தடுமாறி வருகிறார். அதனால் அவருக்கு பதில் மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் ஆரஞ்சு மற்றும் நீல நிறம் கலந்த ஜெர்சியை அணிந்து விளையாடுகின்றனர். சொந்த மண்ணில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலகக் கோப்பை அரங்கில் இந்தியாவை, இங்கிலாந்து அணியால் தோற்கடிக்க முடியவில்லை. இந்த மோசமான வரலாற்றை மாற்ற இங்கிலாந்து வீரர்கள் போராடுவார்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.