மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மகாராஷ்டிர மாநில மக்கள் தொகையில் 30 சதவீதத்துக்கு மேல் இருக்கும் மராத்தா சமுதாயத்துக்கு, 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2018 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவில் சட்டசபையில் நிறைவேற்றினார்.
இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடு வழங்கி கொண்டுவரப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது.
மேலும் ஒரு மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவினால் மட்டுமே 50 சதவீதத்துக்கு அதிகமாக இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை உள்ள நிலையில், அத்தகைய சூழல் எதுவும் மகாராஷ்ட்ராவில் நிலவவில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் மராத்தா சமுதாயத்தை பின் தங்கிய சமுதாயமாக அறிவித்து, மகாராஷ்ட்ரா அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்த நீதிபதிகள், ஒரு சமூதாயத்தை பின்தங்கிய சமூதாயம் என்று அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Discussion about this post