ஒருமுறை மட்டுமே பயன்படக்கூடிய 14 வகையிலான பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசு கடந்த ஜனவரி-1 ஆம் தேதி முதல் தடை விதித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் ஏற்படுத்திய வீச்சையும் வீரியத்தையும் பற்றிய ஓர் சிறப்புத்தொகுப்பைத் தற்போது காணலாம்.
தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன்-5 ஆம் தேதி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து கடந்தாண்டு ஜூலை 6-ஆம் தேதி மக்களின் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிலால் ஆன தாள்கள், பிளாஸ்டிக் கலந்த தெர்மோகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசிய பேப்பர் கப்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் நீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சிகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகிய 14 வகையான பொருட்களுக்கு தடை விதித்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த தடை நடப்பாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மறுபுறம், இந்த பிளாஸ்டிக் தடையினால், பல தொழில்கள் புத்துயிர் பெற்றுள்ளன. குறிப்பாக, இலை உற்பத்தி சார்ந்த தொழில்கள், மண் பாண்டம் தயாரிப்பு, பாத்திரம் தயாரிக்கும் தொழில் மற்றும் பனை ஓலை முடையும் தொழில்களுக்கு மக்கள் மத்தியில் முக்கியத்துவம் கூடியுள்ளது.
தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையால், மீண்டும் பாரம்பரியமான முறையில், பெரும்பாலான மக்கள், இலையில் உணவு, பனைப்பெட்டியில் பலகாரம், மண்குவளையில் நீர் என, உண்ண, பருக ஆரம்பித்துவிட்டோம். அதுதான் தமிழ் மக்களின் ஆரோக்கியமான வாழ்வை நீட்டிக்க உதவும் திறவுகோல். நெகிழி இல்லாத தமிழகமே, ஆரோக்கியமான தமிழகம். அதை நோக்கியதே இந்த அறமுயற்சி.
Discussion about this post