பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா, கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனது 69 வயதில் காலமானார்…. பன்முக கலைஞனின் கலையுலக வாழ்க்கை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனது 69-வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மனோபாலா..
கடந்த 1953ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி கோயம்புத்தூரின் சூலூரில் பிறந்த மனோபாலாவிற்கு சினிமாதான் முதல் காதலாக இருந்தது…! எப்படியாவது சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் இருந்தவர், கனவுத் தொழிற்சாலை தன்னை கைவிடாது என்ற நம்பிக்கையில் சென்னையில் உள்ள கோடம்பாக்கத்திற்கு வந்து சேர்ந்தார்.
முதலில் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு இயக்குனராக செதுக்கி கொண்டவர் ஆகாய கங்கை திரைப்படம் மூலம் இயக்குனராக பரிணமித்தார்….
பின்னர் ரஜினி, விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை வைத்து 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் வெளியான பிள்ளை நிலா, சிறை பறவை, ஊர் காவலன், என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் போன்ற திரைப்படங்களுக்கு இன்றளவும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு என கூறலாம்.
இயக்குனர் வட்டத்திற்குள் மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாத மனோபாலா சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களிடையே புகழ்பெற்றார்.
அதில் கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களின் காமெடி காட்சிகள் மனோபாலாவுக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.
இன்றைய 2கே கிட்ஸ்களின் பேவரட்டான “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு, தனக்கே உரிய பாணியில் பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்தவர்…. தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
சமீபத்தில் லேசான மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். லோகேஷ்கனகராஜ்-ன் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” படத்தில் கடைசியாக நடித்து முடித்திருந்தார்.
இந்தநிலையில் உடல்நலகுறைவு ஏற்பட்டு தனது ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு காலமானார் மனோபாலா. பன்முகத் திறன் கொண்ட மனோபாலாவின் மறைவு திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…!
– ராஜேஸ்கண்ணன்