மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வெற்றிக்கான மம்தா பானர்ஜியின் திட்டம் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….
5 மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இடையே மோதல் வலுத்துள்ளது.
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லி பாஜக தலைவர்கள் கடந்த சில மாதங்களாக கொல்கத்தாவில் முகாமிட்டனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இம்முறை பவானிப்பூர் தொகுதியில் இருந்து நந்திகிராம் தொகுதிக்கு மாறியுள்ளார்.
2011ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமே நந்திகிராம், சிங்கூர் தொகுதிகள் என கூறும் கட்சியினர் இம்முறை இந்த தொகுதிகள் யார்? வசம் செல்லும் என உறுதியாக கூற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுவெந்து அதிகாரி திடீரென பாஜகவில் இணைந்தது தான்.
மேலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு மம்தா வென்றால், தான் அரசியலை விட்டு விலகுவதாக சுவந்து அதிகாரி பகிரங்க சவால் விடுத்தார். அவரின் சவாலை ஏற்று கொண்ட மம்தா பானர்ஜி, நந்திகிராமில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
சுவெந்துவை எதிர்கொள்ள தனது தேர்தல் வியூகங்களை மாற்றியமைப்பார் மம்தா என தெரிவித்துள்ளனர் அவரது அரசியல் பாணியை அறிந்தவர்கள்….
தொகுதியில் அதிக செல்வாக்கு உடைய சுவெந்துவை நேரடியாக தாக்கி வாக்கு சேகரிக்காமல் பாஜகவை விமர்சிக்கும் போர்வையில் வியூகங்களை வகுப்பார் மம்தா என கூறப்படுகிறது.
சுவெந்துவை வீழ்த்த கிடைக்கும் எந்த வாய்ப்பையும் அவர் புறந்தள்ளமாட்டார் எனவும் கூறுகின்றனர் திரிணாமுல் கட்சி நிர்வாகிகள்.
2009 இடைத்தேர்தல் , 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை இணைந்து எதிர்த்த சுவெந்து மற்றும் மம்தா இம்முறை எதிர் எதிரே களம் காணுவதால் மேற்குவங்கத்தின் மொத்த பார்வையும் நந்திகிராம் பக்கம் திரும்பியுள்ளது.
Discussion about this post