மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்புகள் மற்றும் பல்லிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது உடமைகளில் ஏதோ உருவங்கள் நகர்வது போன்று தெரிந்தது. உடனே அவரை தனியே அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 47 அரிய வகை பாம்புகள் மற்றும் 2 பல்லி வகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவை மலேசியாவில் இருந்து திருச்சி கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து முகமது மொய்தீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருச்சி மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தௌ பாம்புகள் மற்றும் பல்லிகளை சோதனை செய்து வருகின்றனர். அந்த பாம்புகள் மற்றும் பல்லிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிகிறது இதற்கான பணிக்ளை அதிகாரிகள் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.