உலக அளவில் கொசுக்களால் பரவும் நோய்கள் மனிதனுக்கு உயிர்க்கொல்லியாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக டெங்கு, மலேரியா போன்றவை மனிதர்களை அச்சுறுத்தும் நோய்களில் முதன்மை இடம் வகிப்பவையாகும். தற்போது உலக சுகாதர அமைப்பானது அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை மலேரியா நோய் இல்லாத நாடுகள் என்று அறிவித்து சான்றளித்துள்ளது.
அஜர்பைஜான்
இந்த சான்றிதழானது இந்த இரு நாடுகளும் மலேரியாவை ஒழிப்பதற்கு நூற்றாண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிகழ்வுகளின் பயனாக கிடைத்துள்ளது. மலேரியா ஒழிப்புச் சான்றிதழானது ஒரு நாட்டில் மலேரியா தொற்று முற்றிலும் இல்லை என்பதை ஆராய்ந்து உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கும். இந்த நிலையினை எட்டுவதற்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் அனோபிலிஸ் வகை கொசு பரவலை தடுக்க இந்நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. உள்நாட்டில் பரவும் ப்ளாஸ்மோடியம் வைவாக்ஸ் வகை மலேரியா நோய்த் தொற்றானது இறுதியாக அஜர்பைஜான் நாட்டில் 2012லும் தஜிகிஸ்தானில் 2014லும் பதிவாகியிருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 41 நாடுகளும் 1 பிரதேசமும் சேர்த்து மலேரியா இல்லாத நாடுகள் என்கிற சான்றிதழைப் பெற்றுள்ளன. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 நாடுகள் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்தது ஆகும்.