யானையிடம் செல்லமாக வீடியோ கால் பேசிய பாகனின் மனைவி

கோவையில் யானைகள் புத்துணர்ச்சி முகாமில், பாகனின் மனைவி யானையிடம் வீடியோ கால் பேசிய காட்சி, பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 2-ந்தேதி வரை 48 நாட்கள் யானைகள் முகாம் நடைபெறுகிறது. இதில், திருக்கோயில் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான 28 யானைகள் பங்கேற்றுள்ளன.

யானைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதுடன் அவற்றுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக நடத்தப்படும் இந்த முகாமில், தண்ணீரில் ஆட்டம் போடுவது, கால்பந்து விளையாடுவது மற்றும் துள்ளி குதித்து யானைகள் விளையாடி வருகிறது. ஒன்றொடு ஒன்று இணைப் பிரியாத மிகுந்த பாசத்தை வெளிப்படுத்தும் கோயில் யானைகள், முகாம் நிறைவு நாளில் பிரிவதற்கு மனம் வராமல் கண்களில் தண்ணீர் வடிப்பதையும் செய்தியாக வந்துள்ளது.

இந்நிலையில், கோவையில் நடைபெறும் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள கள்ளழகர் கோவில் சுந்தரவள்ளி தாயார் யானையின் பாகன் தன் மனைவி, குழந்தைகளுடன் செல்போனில் வீடியோ கால் பேசியுள்ளார். அப்போது, பாகனின் மனைவி குரலை கோவில் யானை கூர்ந்து கவனித்தது. இதனைத்தொடர்ந்து, யானையிடம் பேச அவரது மனைவி ஆசைப்பட்ட நிலையில், பாகனும் வீடியோ கால்-யை யானை இருக்கும் பக்கமாக திருப்பினார்.

இதனைத் தொடந்து, யானையின் பெயரை செல்லமாக கூறி அழைத்த பாகனின் மனைவி, நல்லா இருக்கிறயா? என்று நலம் விசாரித்தும், நேரா நேரத்துக்கு சாப்புடுகிறாயா? என்றும் குறும்பு செய்யாமல் அப்பா சொல்வதை கேள் என்றும் அறிவுரை கூறினார். அப்போது, யானையும் தனது தலையை அசைக்க, பார்ப்பதற்கு சரி அம்மா என்று சொல்வதைப் போலவே இருந்தது.

இதற்கிடையே, செல்போன் திரையில் பாகனின் மனைவி முகத்தை அடையாளம் கண்டு கொண்ட அந்த யானையின் முகம், சில நொடிகளிலேயே மலர்ந்தது பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

Exit mobile version