மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைப்பதிலிருந்து பின்வாங்கிய நிலையில், 2-வது பெரிய கட்சியான சிவசேனாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 105 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. எனினும் முதல்வர் பதவியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என சிவசேனா உறுதியாக இருந்ததால், ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். எனினும் பெரும்பான்மைக்கு போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக அறிவித்தது.
இந்நிலையில் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். 56 உறுப்பினர்களே உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவளித்தால் மட்டுமே சிவசேனாவினால் பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தால் ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது.