மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிகாலை முதலே நாடு முழுவதும் சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சக்திக்கு 9 நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படும் நிலையில், சிவபெருமானுக்கு ஓர் இரவு மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் விடிய விடிய நான்கு காலங்களிலும் சிவலிங்கத்திற்கு இளநீர், பால், தயிர், பன்னீர், பழங்கள், சந்தனம் உள்ளிட்டவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் வில்வமாலை சாற்றி, தாமரை பூக்கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு, நைவேத்தியமும் செய்யப்படும்.
இன்றிரவு மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மகா சிவராத்திரியையொட்டி, அதிகாலை முதலே பல்வேறு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள், யாகங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
மகா சிவராத்திரியையொட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கிர்கானில் உள்ள பாபுல்நாத் கோயிலில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மங்கமேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மகா சிவராத்திரி தினமான இன்று அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதேபோல, மகா சிவராத்திரியையொட்டி வாரணாசியில் ஏராளமான சிவபக்தர்கள் வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். சிவன்கோயில்களிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.