விடியா திமுக அரசு பெரும்பாலான மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்காதவாறு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். ஆட்சியை பிடிப்பதற்காக வாயிலேயே வடை சுட்ட திமுக, மக்களின் காதுகளில் பூ சுற்றியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, அனைத்து மகளிருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என விடியா திமுக அரசு வாக்குறுதியளித்தது. இதனை நம்பி அப்பாவி மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த விடியா அரசின் சாயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கியுள்ளது.
ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், முக்கிய தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏழை மக்களை ஏமாற்றி வந்தது விடியா அரசு. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இருப்பினும் இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயனடைந்து விடக் கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாய் இருந்த விடியா அரசு, திட்டத்தின் கீழ் பயனடைய பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டு ஏழை, எளியோரை இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது.
அதன்படி மாதம் இரண்டரை லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது. அதேபோல் இரண்டரை லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி, வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோர் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது. சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு உரிமைத் தொகை கிடைக்காது. ஏற்கனவே முதியோர், விதவை ஓய்வூதியம் போன்றவற்றை பெறுவோரும் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, எந்த ஒரு மக்களும் பயனடைந்து விடக் கூடாது என்பதில் வெற்றியடைந்து விட்டது திமுக. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு ஒன்றரை கோடி குடும்பங்கள் பயனடைவர் என கூறும் திமுகவின் செயல், மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதையாக உள்ளது என மக்கள் நொந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த வெற்றுத் திட்டத்தை அறிவித்ததன் காரணமாக ஸ்டாலினின் குடும்ப வாரிசுகளே ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து பயனடைந்ததாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், இனிவரும் காலங்களில் திமுக ஒருபோதும் ஆட்சியமைப்பது குறித்து யோசிக்க முடியாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.