ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு-வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னைப் பல்கலைக்கழகம்!

ஆன்லைனில் 90 நிமிடங்களுக்கு நடைபெறும் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், 2019-20-ம் கல்வியாண்டின் இறுதி செமஸ்டர் தேர்வுகள், வரும் 21-ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது. Pen and Paper mode-ல் நடைபெறும் இத்தேர்வு, காலை 10 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 3.30 மணி வரையும் நடைபெறுகிறது.

வினாத்தாள் பதிவிறக்கம் தொடர்பான இணையதள விவரங்கள், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் என்றும், தேர்வுக்கு 30 நிமிடங்கள் முன்பாக பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, ஏ4 தாள்களில் விடைகளை எழுதி, அதை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு விடைத்தாளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், பதிவேற்றம் செய்த பின்னர், விடைத்தாள்களை மாணவர்கள் மீண்டும் சரிபார்க்க முடியாது என்றும் சென்னைப் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. விடைத்தாளை பதிவேற்றம் செய்ய இயலாதவர்கள், அவர்களின் கல்லூரி முதல்வர்களுக்கு தேர்வு எழுதிய நாளன்றே விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில், மாதிரி பயிற்சித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version