ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றிப் பேரணியில் ஈடுபட்ட ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் மீதான சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி இயக்குநர் வாராகி, எழிலரசு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தடையை மீறிப் பேரணி நடந்தால் அதை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. தடையை மீறிப் பேரணி சென்றதற்காக, ஸ்டாலின், கே.எஸ் அழகிரி, ப.சிதம்பரம், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், வைகோ, வீரமணி உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்துத் தடையை மீறிப் பேரணி நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளக் காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Exit mobile version