இந்து அறநிலையதுறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், தாங்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர், பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன், அருகிலுள்ள கோவிலில் உள்ள முதன்மை தெய்வத்தின் முன், தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவுகளின் படி தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் எந்த உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதாக கூறி இந்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென என ஸ்ரீதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்து அறநிலைய துறையால் நியமிக்கப்பட்ட ஆணையர் மற்றும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் என்பதால் உறுதிமொழி எடுக்கவில்லை எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் உறுதி மொழி எடுக்கும் விதி பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்து அறநிலையதுறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், தாங்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி ஏற்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.