நிலத்தை கையகப்படுத்தும் மாநகராட்சி முடிவுக்கு தடை விதிக்க மறுப்பு

சென்னையில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, ஆக்கிரமிப்பு நிலத்தை கைப்பற்றிய மாநகராட்சியின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடையாறில் இயங்கி வரும் செயின்ட் பேட்ரிக் கல்வி நிறுவனம் மாநகராட்சிக்கு சொந்தமான 5.20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். கடந்த, 2012ம் ஆண்டு பட்டா கேட்டு கல்வி நிறுவனம் முறையீடு செய்தது தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அந்த நிறுவனம் நாடிய நிலையில், சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சிக்கு தடை இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி சார்பில் 5.20 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதை எதிர்த்து பேட்ரிக் கல்வி நிறுவனம் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் துரைசாமி, இளந்திரையன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நிலத்தின் ஆவணங்களை மோசடி செய்து தயாரித்ததோடு, கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்களை கேடயமாக பயன்படுத்திய கல்லூரி நிர்வாகத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version