பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு நக்கீரன் கோபால் நேரில் ஆஜராக வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தன்னிடம் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக நக்கீரன் கோபால் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு அந்த ஆதாரங்கள் உதவியாக இருக்கும் என்ற வகையில், நக்கீரன் கோபால் நேரில் ஆஜராக வேண்டும் என, சிபிசிஐடி தரப்பில் இருந்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதை ரத்து செய்யக்கோரி, நக்கீரன் கோபால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ எடுத்துக்கொள்ளும் வரை, சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு நக்கீரன் கோபால் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனுக்கு நக்கீரன் கோபால் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், கிண்டியில் உள்ள சிபிசிஐடி போலீசார் அலுவலகத்தில் ஏப்ரல் 1 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.