அதிவேகமாக சென்றால் உடனுக்குடன் தண்டனை வழங்க முடியுமா?: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் கடந்த 8-ம் தேதி, அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய மாதம்பாக்கத்தை சேர்ந்த 54 வயதான வரதன் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தானாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கவனக் குறைவாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய ராகவன் பல்வேறு பரிந்துரைகளை நீதிமன்றத்திற்கு அளித்துள்ளார். அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கேமரா மூலம் கண்காணித்து உடனுக்குடன் தண்டனை வழங்குதல் குறித்து பதிலளிக்கும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version