புதுச்சேரி மாநில அரசின் அன்றாட பணிகளில் துணைநிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, புதுச்சேரி அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். கூட்டாட்சி தத்துவத்தின்படி துணைநிலை ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.