சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், முறையான விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், விளம்பரத்திற்காகவே கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை செய்வதில் முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி, வீரசண்முகமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து வீரசண்முகமணிக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நிபந்தனை ஜாமின் வழங்கினார்.
அப்போது நீதிபதி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, எந்த காரணமும் தெரிவிக்காமல் கைது நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது விளம்பரத்திற்காகவே என்று கருத முடியும் என்றும் பழிவாங்கும் நோக்கத்துடனேயே கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கண்டனம் தெவித்தார். பழிவாங்கும் நோக்கத்துடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இனி செயல்படாது என தான் நம்புவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.