சென்னை மாநகராட்சியின் தெற்கு பகுதியில் உள்ள மடிப்பாக்கம் குடியிருப்புகள் நிறைந்த பகுதி ஆகும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் உட்பட பல்வேறூ தரப்பினரும் இங்கு வசிக்கின்றனர்.
மாநகராட்சியின் 14 வது மண்டலமான பெருங்குடிக்கு உட்பட்ட பகுதியில் வரும் மடிப்பாக்கத்தில் தற்போது மழைநீர் வடிகால், பாதாளச் சாக்கடை மேம்பாடு ஆகிய கட்டிட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அதன் காரணமாக, மடிப்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து அதிகம் உள்ள பொன்னியம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை தெரு, மடிப்பாக்கம் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதாவது பொன்னியம்மன் கோயிலை ஒட்டிய தெரு பல மாதங்களாக சேதமடைந்த நிலையில்தான் உள்ளது. மடிப்பாக்கம் – மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பதால் பெரும்பாலான வாகனங்கள் பொன்னியம்மன் கோயில் தெரு வழியாகவே வேளச்சேரி, மேடவாக்கம், தாம்பரம் பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. சாலைகள் தரமற்றதாக இருப்பதால் தினமும் அச்சத்துடனே வாகனங்களை ஓட்டுகிறோம் என்று வாகன ஓட்டிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதியினைச் சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்களும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றூம் அதை சுற்றியுள்ள தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகளை தாறுமாறாக தோண்டி போட்டுள்ளனர். மழை பெய்தால், சாலைகளில் எங்கு பள்ளம் உள்ளது என்பதுகூட தெரியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும். அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், முறையான திட்டமிடலுடன் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக மடிப்பாக்கம் ஏரியை சுற்றி நடைபாதையும், சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏரிக்கரை தெருவுக்கு காலை, மாலை வேளைகளில் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்தத் தெருவில் பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக சாலைகளை தோண்டி போட்டனர். பல மாதங்கள் ஆகியும் திட்டப் பணிகள் முடிந்தபாடில்லை. மழைக்காலம் தொடங்கிவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எனவே, பருவ மழை தொடங்குவதற்கு முன்பு பணிகளை மாநகராட்சி விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகளின் தகவல் படி, “மடிப்பாக்கம் பகுதியில் நீண்டகால அடிப்படையிலான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. “பொன்னியம்மன் கோவில் தெரு, மடிப்பாக்கம் பிரதான சாலை, ஏரிக்கரை தெரு ஆகிய இடங்களில் பெருநகர் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டு, குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்து, மாநகராட்சியிடம் ஒப்படைத்த பிறகு, புதிதாக சாலை அமைக்கப்படும். எனினும், திட்டப் பணிகளை விரைந்து முடித்து, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தேவைக்கேற்ப, பழுதடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைத்து தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதத்தினை முன்வைத்தார்கள்.