மதுரை உலகத்தமிழ்ச் சங்கமும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும்..!

இன்றைக்கு பரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்னவென்றால் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இருந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவப்படம் இந்த விடியா திமுக அரசால் அகற்றப்பட்டதுதான். இதனைக் கண்டித்து அதிமுக எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் ஒரு கண்டன கணொளியை வெளியிட்டுருந்தார். உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும் புரட்சித் தலைவருக்கும் ஒரு உறவு உண்டு. அது எந்த அளவுக்கு காத்திரமான பிணைப்பு என்பதை இக்கட்டுரையில் வாயிலாக காண்போம்.Ulaga Tamil Sangam - Wikipedia

மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தினை உருவாக்கியவரே புரட்சித் தலைவர்தான். 1981 ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு மதுரை மாநகரில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் உரையாற்றிய பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள், “உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின்கீழ் செயல்படும் வகையில் உலகத் தமிழ்ச்சங்கம் இயங்கும்” என்று அறிவித்தார். அதன்படி மதுரை தல்லாகுளத்தில் 14.15 ஏக்கர் அளவிலான நிலம் ஒதுக்கப்பட்டது. பிறகு கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1985 ஆம் ஆண்டு சித்திரை முதல் தேதியன்று  உலகத் தமிழ்ச் சங்கத்தினை புரட்சித் தலைவர் அவர்கள் தன் கையால் திறந்து வைத்தார். இசையரங்கு, பாட்டரங்கு, ஆடலரங்கு, வில்லிசை, இன்னிசை, கருத்தரங்கு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உலகத்தமிழ்ச் சங்கம் எம்.ஜி.ஆர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

உலக நாடுகளில் இயங்கி வரும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஆகியவை பற்றிய விவரங்களைத் தொகுத்தல். உலகமெங்கும் இயங்கிவரும் இவ்வமைப்புகளை ஒரு குடையின்கீழ் பதிவு செய்து ஒருங்கிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்குதல்.தமிழறிஞர்கள், கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பித் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிப் பரப்புதல். தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளுக்கு ஆய்வாளர்கள் அனுப்பித் தமிழர் நிலையினை ஆய்தல், அந்நாட்டு ஆய்வாளர்களைத் தமிழகத்திற்கு வரவழைத்துக் கருத்துப் பரிமாறுதல். பிறநாட்டுத் தமிழர் களஞ்சியம் தயாரித்தல். தமிழ் மொழியிலுள்ள சங்க கால நூல்கள், இலக்கியங்கள் போன்றவற்றை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் அறிந்து தெளிய வாய்ப்புகளை ஏற்படுத்துதல். உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுத்தல். உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் இரு நாடுகளைத் தேர்வு செய்து ஒவ்வோர் ஆண்டும் ஆய்வரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடத்துதல். கலைநுட்பம் வாய்ந்த சிற்பங்கள், நாட்டுப்புறப்பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் கண்டு பாராட்ட வாய்ப்பு ஏற்படுத்துதல். உலக நாடுகளின் அருங்காட்சியகங்களில் இடம் பெற்றுள்ள தமிழ் தொடர்பான ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், அரிய கலைப் பொருட்கள் முதலிய தரவுகளைத் திரட்டுதல் போன்றவை உலகத் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளன.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று கடமையைப் பற்றிப் பாடிய எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் எனும் மூன்றெழுத்திற்கு இத்தகைய கடமையை ஆற்றியுள்ளார். அதனை ஆளுங்கட்சியினர் பெருமையாக கொள்ளாது இருப்பதில் கூட பிரச்சனையில்லை. ஆனால் நிறுவியவரின் புகைப்படத்தையே அகற்றுவதும் வரலாற்றினைத் திரிப்பதும்தான் சரியான செயலாக கருத முடியவில்லை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ் இருக்கும் வரை எம்.ஜி.ஆர் எனும் பெயர் ஒலிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. மொழியையும் அதன் சீரிய செயல்பாட்டாளரையும் யாராலும் அழிக்க முடியாது.

Exit mobile version