கொடியேற்றம் :
கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாகக்கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென்று எம்பொருள் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள்ம் மேயவனே.
– சம்பந்தர் தேவாரம்
கொடியேற்றப்படும் கொடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ரிஷபம், தர்ம உருவாகவும், ஆத்மாவின் உருவாகவும் மதிக்கப்படுகிறது. ஆத்மாக்களையும், தர்மத்தையும் கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்லும் இறைவனின் கருணை இக்கொடியேற்ற திருவிழாவில் விளக்கப்படுகிறது. பொதுவகையில் உயிர்களுக்கு அருள்புரியும் இறைவன், சிறப்பு வகையில் அருள்புரிய ஆயத்தமாக இப்பன்னிரண்டு நாட்களும் காத்திருக்கிறான் என்பதை இக்கொடியேற்றம் உணர்த்துகிறது.
முதல்நாள் திருவிழா, தூல தேகத்தை நீக்கிக் கொள்ளும் பயனை விளக்குவதாக அமையும். முதல் நாள் இரவு, சிவபெருமான் மரத்தடியில் வீற்றிருப்பதை விளக்கும் கற்பக விருட்ச வாகனம் எழுந்தருளும். இதை விருத்திக்கிரம சிருட்டிக் கோலம் என்பர். மரத்தின் கிளைகளும், இலைகளுக் தத்துவங்களாகவும், உயிர்வர்க்கங்களாகவும் உள்ளன். இவற்றின் அடியில் இறைவன் இருந்து, சிருட்டிக்கெல்லாம் வேர்போல் தாம் இருந்தருளுவதை இது உணர்த்துகிறது.