இன்று மே1 காலை 7 மணியளவில் மரவர்ணச் சப்பர வாகனம் நான்கு மாசிவீதிகளில் வலம் வந்தது. இன்று மாலை 6 மணியளவில் இந்திரவிமானம் நான்கு மாசிவீதிகளில் வலம் வர இருக்கிறது. ஒன்பதாம் நாள் திருவிழா, இரவு, அருள்மிகு மீனாட்சியம்மை தடாதகைப் பிராட்டியாக மதுரையம்பதியில் அவதரித்து, ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வினைக் குறிக்கும் வகையில், அம்மனின் திக்கு விஜயம் நடைபெறும். அப்பொழுது அம்மன், அஷ்டதிக்கு பாலகர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழா, சகளம், நிஷ்கனம், சகளநிஷ்கனம் என்னும் வடிவம் மூன்றும், சிருஷ்டி முதலிய முத்தொழில்களும், தன்மை முதலிய மூன்றிடத்து இருத்தலுமாகிய ஒன்பதும் இல்லை என்பதைக் குறிப்பதாகும்.
திக்கு விஜயம்
கயபதி ஆதி ஆய வடபுலக் காவல் வேந்தர்
புயவலி அடங்க வென்று, புழைக்கைமான் புரவி மான்தேர்
பயல்மதி நுதல்வேல் உண்கண் பாவையர் ஆய மோடு
நயம்மலி திறையும் கொண்டு, திசையின்மேல் நாட்டம் வைத்தாள்.
இவ்வாறு மற்றைத் திசைகாவலர் யாரையும் போய்த்
தெவ்ஆண்மை சிந்தச் செருச்செய்து, “திறமையும் கைக்கொண்டு
அவ்வாறு வெல்வாள் எனமூன்றுஅரண் அட்ட மேருக்
கைவார் சிலையான் கயிலைக்கிரி நோக்கிச் செல்வாள்.
– பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம்.