ஏழாம் நாள் திருவிழா, எழுவகைப் பிறப்பு, கலையாதிகள் ஏழு, மாயகுணம் ஏழு, என்னும் இவற்றைத் தவித்தற் பொருட்டாகும். ஏழாம்நாள் காலையில் பிட்சாடனத் திருக்கோலத் திருவிழா நடைபெறும். தாருகாவனத்து ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் ஆணவ மலத்தால் தாங்கள் சுதந்திரர்களென எண்ணிக் கடவுளை மறந்தனர். அவர்கள் பரதந்திரர்களென உணர்த்துதற் பொருட்டு இறைவன் பிட்சாடன மூர்த்தியாய்ச் செயல்களாலும் ரிஷிகளும், அவர் பத்தினிமார்களும் பரதந்திரர்களேயென அவர்களை உணரச் செய்து, பரமன் மறைந்தருளினான். பராக்ரமக் கோலமே பிட்சாடனக் கோலமாகும். ஏழாம் நாள் இரவில் அதிகாரநந்தி வாகனம், இது விருத்திக்கிரம சங்கரக் கோலம் என்பர். அதிகார நந்தி மான், மழு, சதுர்ப்புஜம், முக்கண் முதலிய குறிகளோடு சாரூப்பிய பதவியைப் பெற்றவர். இவர் விஞ்ஞான கலர் எனும் ஆன்மாக்களுள் சிறந்தவர் ஆவர். கயிலையில் சிவசந்நிதானத்தில் அதிகாரம் செலுத்துபவர். ஆதலால் அதிகாரநந்தி எனப் பெயர் பெற்றார்.
இன்று இரவு ஏழு மணியளவில் நான்கு மாசிவீதிகளில் நந்திகேசுவரர் யாளி வாகனம் சிறப்பு உலா செய்ய இருக்கிறது.
நந்திகேசுவரர்
வந்துஇறை அடியில் தாழும்
வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த
வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர்
அலகுஇடும் குப்பை ஆக்கும்
நந்திஎம் பெருமான் பாத
நகைமயர் முடிமேல் வைப்பாம்.
– பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம்
யாளி
கிரிஎட்டும் என மழையைக் கிழித்துஎட்டும்
புழைக்கை, மதிக் கீற்றுக் கோட்டுக்
கரிஎட்டும், சினமடங்கல் நாலெட்டும்,
எட்டெட்டுக் கணமும் தாங்க,
விரிஎட்டுத் திசைபரப்ப, மயன்நிருமித்து\
உதவியாவ் விமானம் சாத்தி
அரிஎட்டுத் திருஉருவப் பரஞ்சுடரை
அருச்சிப்பான் ஆயி னானே.
– பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம்