மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது, வரும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கான ஆரம்பம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில், ஊரக பகுதிக்கான மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த செந்தில், கனகா, சுகிர்தா, செல்லப்பன், இன்ப தமிழரசி, தவமணி, ருத்ராதேவி உள்பட 8 பேர் வெற்றி பெற்றனர். இதேபோல், அதிமுகவை சேர்ந்த ஊராட்சிக்குழு தலைவர் சாரதாவும் வெற்றி பெற்றார். அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுகவினர் படுதோல்வியடைந்தனர். இதையடுத்து, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி,
திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான ஆரம்பம் என தெரிவித்தார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், மதுக்கடைகளை குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பலமுறை வலியுறுத்திய நிலையில், தற்போது 500 டாஸ்மாக் கடைகளை விடியா திமுக அரசு மூடியுள்ளதாகவும், இதற்கு கழக பொதுச்செயலாளர்தான் காரணம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். ஆனால், விற்பனை குறைவாக இருந்த டாஸ்மாக் கடைகளை மட்டும்தான் விடியா அரசு மூடியுள்ளதாக அவர் குற்றச்சாட்டினார்.
Discussion about this post