தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 91 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இதேபோல் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்பு மனுக்கள் பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அலுவலக வளாகத்துக்குள் வேட்பாளருடன் அதிகபட்சம் 3 கார்கள் மட்டுமே வரலாம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் விடுமுறை என்பதால் வேட்பு மனுக்கள் பெறப்படாது.
வேட்புமனு தாக்கல் செய்ய 26ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் 26-ம் எண் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு உள்ளன. இதற்கான விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.
அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் 5 ஆண்டுகளுக்கான தங்களின் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும்.
வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடப்பதற்கு முன் 3 முறை பிரபல நாளிதழ்கள், டி.வி. சேனல்களில் தன் மீதான வழக்கு விவரங்கள் பற்றிய விளம்பரங்களை வேட்பாளர் கொடுக்க வேண்டும்.
Discussion about this post