மக்களவை தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார்

மக்களவைத் தேர்தல் சூறாவளிப் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளிப் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். சேலம் மாவட்டம் கருமந்துறையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ், சேலம் அதிமுக வேட்பாளர் சரவணன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதலமைச்சரை வரவேற்றனர்.

பின்னர், செல்வ விநாயகர் கோயிலில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம், கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீஷ், சேலம் வேட்பாளர் சரவணன் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் வீதிவீதியாக சென்று கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Exit mobile version