அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது என தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் தமிழகத்தில் தொகுதி மறுவரையறை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் , இட ஒதுக்கீடு தொடர்பான நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதுவரை உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கிறது.. இந்நிலையில் தமிழக அரசு மற்றும் தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் சரியாக கடைபிடிக்க படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போன்று, பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடும், பட்டியல் இனத்தவருக்கு, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திமுக உள்ளிட்ட மற்ற தரப்பு மனுக்களை விசாரிக்க தேவையில்லை எனவும், அந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post