தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மே மாத இறுதியில் வெளியிடப்படும் என்று, உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் வார்டு வரையறை பணிகள் முடிவடைந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வார்டு சுழற்சி, இட ஒதுக்கீடு பணிகள் 90 நாட்களில் முடிக்கப்படும் என்றும் பதிலளிக்கப்பட்டது. எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்ற நீதிபதிகள், 2017 நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்ட ஆணையத்தின் மனுவின் நிலை என்ன என்றும், வார்டு வரையறை தொடர்பான அறிக்கையை 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, விசாரணையை 28-ம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.