கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக சார்பாக போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை, திமுகவினரின் தூண்டுதலின் பேரில் தேர்தல் அலுவலர் நிராகரித்ததால், அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக சார்பாக, ஒரு மாவட்ட கவுன்சிலர் மற்றும் 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி 13வது வார்டு கவுன்சிலர், 7 மற்றும் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் மூன்று அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை, தேர்தல் அலுவலர் நிராகரித்தார்.
தகவலறிந்து வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு மற்றும் பிரபு ஆகியோர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விளக்கம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அலுவலரை கண்டித்து முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவின் அதிகாரத்தை நிலைநிறுத்தவே, அக்கட்சி ஆதரவாக தேர்தல் அலுவலர் செயல்பட்டு அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரித்ததாக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு குற்றம்சாட்டினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், திமுகவினரின் இந்த செயலால் தேர்தல் முறையாக நடைபெறுமா? என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Discussion about this post