வாயில்லா ஜீவன்கள் பாதிக்கப்படும் என்பதால், பிளாஸ்டிக் பொருட்களை சாலையில் வீசுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான பசுமாடு உணவு உட்கொள்வதிலும், கழிவு கழிப்பதிலும் சிரமப்பட்டது. இதையடுத்து அவர், பசுமாட்டை சிகிச்சைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றார்.
மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், பசுமாட்டின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஐந்தரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பசு மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பிறகு பசு மாடு உடல் நலம் தேறி, உணவு உட்கொண்டு வருகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பசுமாட்டை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
பசுமாட்டிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பசுமாட்டிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழுவை அமைச்சர் பாராட்டினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வாயில்லா ஜீவன்கள் பாதிக்கப்படும் என்பதால் பிளாஸ்டிக் பொருட்களை சாலையில் வீசுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
Discussion about this post